ஆச்சரியமான ஒளி!

தலைப்பு வசனம்

ஆச்சரியமான ஒளி!

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. He will guard the feet of His saints, But the wicked shall be silent in darkness. “For by strength no man shall prevail. 1 Samuel 2:9

உண்மை சம்பவம்

படிப்பறிவு இல்லாத ஒரு எளிய கொத்தனாராகிய ஸ்மித் விக்கிள்ஸ்வொர்தை தேவன் தமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக, மனுபுத்திக்கு எட்டாதவிதத்தில் வெகு வல்லமையாக எடுத்து பயன்படுத்தியிருக்கின்றார். பட்டணத்தின் எளிமையான சேரிப்பகுதிகளுக்கே சுவிசேஷத்தை அறிவிக்க ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் செல்லுவார். ஏழையிடம் எப்படி அவர் நடந்தாரோ அப்படியேதான் ஐசுவரியவானிடமும் நடந்து கொண்டார்.

அவரிடம் ஏற்றத்தாழ்வுகள் எதுவுமே கிடையாது! இங்கிலாந்து தேசத்தில் ஒரு சிறிய கல் வீட்டில் திருப்தியுடன் வாழ்ந்தார். ஆண்டவர் இயேசுவுடைய முழு நேர தேவ பணிக்காக, தனது கொத்தனார் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்த சமயம், தனது ஆண்டவரைப் பார்த்து: “ஆண்டவரே, எனது மிதியடிகள் கிழிந்து பொத்தலாகி வேறு மிதியடிகளை வாங்க எனக்கு வழியில்லாமல் போகும் பட்சத்தில் அல்லது எனது வஸ்திரங்கள் பழையதாய் கிழிவுண்டாகி அதற்கு தையற்காரர் ஒட்டுப்போட நேரிடும் பட்சத்தில், நான் எனது பழைய கொத்தனார் வேலைக்கே போய்விடுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்!” என்று தனக்கே உரித்தான ‘பரம தந்தை – அவருடைய பிள்ளை’ என்ற பாசத்தில் கூறினார். அவருடைய வார்த்தையின்படியே எந்த ஒரு தாழ்ச்சியும் இல்லாமல், கர்த்தர் அவரை நிறைபூரணமாக வழிநடத்தினார்.ஸ்மித்

ஆஸ்திரேலியாவில், சிட்னி நகரில் நடந்த ஒரு சம்பவம் வேடிக்கையானது. ஆனால் அது வினயாகவில்லை, விளைவை ஏற்படுத்தியது. சிட்னியில் விக்கிள்ஸ்வொர்த்தின் சுகமளிக்கும் கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஞாயிற்றுக்கிழமை நண்பகல் உணவுக்காக, ஒரு போதகர், இவரை ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அது அந்த நகரிலேயே மிக உயர்ந்த ரக விடுதி, மேல் தட்டு மக்களும், பெரிய ஐசுவரியவான்களும் மட்டுமே நுழையக்கூடிய விடுதி. உயர்ந்த நாகரிகம் கடைபிடிக்கப்படும் விடுதி. அங்கு நுழைந்ததுமே, விக்கிள்ஸ்வொர்த்தின் கோட்டை மரியாதையுடன் கழற்றி, அங்கிருந்த கோட் ஸ்டேண்டில் மாட்டினார் ஒரு ஹோட்டல் ஊழியர்.

ஆச்சரியமான ஒளி!
ஆச்சரியமான ஒளி!

ஒரு கழுகுப் பார்வையுடன் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டார் விக்கிள்ஸ்வொர்த். அவ்வளவுதான்! ஒரு வெள்ளி முள்கரண்டியை எடுத்துக் கொண்டு, மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை டிங், டிங் என தட்டி மணியோசை கிளப்ப ஆரம்பித்தார். அந்த அறையே ஸ்தம்பித்தது. உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் அப்படியே நிறுத்தி விட்டு, அசைவற்றுப் போனார்கள். அவர் தமது கையை உயர்த்தினார், கர்ஜித்தார் – ‘சீமான்களே, சீமாட்டிகளே, நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீங்கள் யாருமே சாப்பிட ஆரம்பிக்கும் முன் ஜெபிக்கவில்லையே! உங்களைப் பார்த்தால் ஒரு பன்றிக் கூட்டத்தை போலிருக்கிறது எனக்கு. உங்களுக்கு இதை அளித்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல், இப்படி பாய்ந்து பாய்ந்து விழுங்குகிறீர்களே! தலையைக் குனிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்”

இந்த சூழ்நிலையில் அவரை அழைத்துக்கொண்டு போன போதகருக்கு அங்கு மிகவும் அவமானமாயிருந்தது. அவரை மற்றவர்கள் பார்க்காத வண்ணம், மேஜைக்கடியில் புகுந்து வெளியே ஓடிவிடலாமென்றும் தோன்றியது. சொல்லியவாறே, அவர்களுக்காக ஜெபித்தார் விக்கிள்ஸ்வொர்த். விக்கிள்ஸ்வொர்த்தும் அந்த போதகரும் உணவருந்தி முடித்துவிட்டு போவதற்கு முன்பாகவே, சாப்பிட வந்தவர்களில் இரண்டு உயர்குடி மக்கள் தங்கள் குடும்பத்துடன் அவரை அணுகி இரட்சிப்பைப் பெற்றுச் சென்றார்கள். இரட்சிப்பைப் பிரகடனப்படுத்த அவர் இடம், பொருள், ஏவல் என்று எதையுமே பார்த்ததில்லை.

1913ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி புது வருட பிறப்பு அன்று, ‘பாலி’ என விக்கிள்ஸ்வொர்த் அன்புடன் அழைத்த அவரது மனைவி மேரி ஜேன், சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று மரித்துப் போனார்கள். அவருடைய உத்தரவின்படி, அம்மையாரின் ஜீவனற்ற சடலம் அவரின் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே அவர்களது படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டது. விக்கிள்ஸ்வொர்த் தனியாளாக அம்மையாரின் அறைக்குச் சென்று, தனக்கு பின்னாக அறையை மூடிவிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மரணத்தை கடிந்து கொண்டு கட்டளையிட்டதும், அம்மையார் தனது கண்களைத் திறந்து தன் கணவனைப் பார்த்து ‘இதை ஏன் செய்தீர்கள், ஸ்மித்?’ என்று கேட்டார்கள். ‘என் அன்பே பாலி, நீ எனக்கு தேவை’ என கண்ணீருடன் கூறினார் விக்கிள்ஸ்வொர்த்.

’ஸ்மித், எனது தேவப்பணி நிறைவு பெற்றுவிட்டது. தேவன் என்னை அழைக்கிறார்’ என்று அம்மையார் கூற அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின்பு தன் மனைவியைப் பார்த்து, ‘நல்லது பாலி, நான் உன்னைப் போக அனுமதிக்கிறேன்’ என்று சொன்னார். பின்னர் மேரி ஜேன் அம்மையார் தனது தலையை தலையணையில் வைத்து படுத்து தனது ஆண்டவரண்டை கடந்து சென்றார்கள்! விக்கிள்ஸ்வொர்த் 14 மரித்தோரை உயிரோடு எழுப்பியிருக்கின்றார். கல்வி ஞானமற்ற கொத்தனாரைக் கொண்டு திரள் கூட்டமான மக்களை அவர்களுடைய வியாதிகளிலிருந்தும், பாடுகள், வேதனைகளிலிருந்தும் பிசாசின் பிடிகளிலிருந்தும் விடுவித்து தேவன் அவரைப் பயன்படுத்த அவரிடமிருந்த ஒரே ஒரு எளிய காரணம்: ‘தனது பரலோக எஜமானுக்கு, தன்னை முழுமையாக கையளித்ததேயாகும்’

(நன்றி: விசுவாச அப்போஸ்தலன் – ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்)

சம்பவ விளக்கம்

ஆச்சரியமான ஒளி!

அன்பார்ந்தவர்களே,  நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒருவராக இருந்தால், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆசாரியராக இருக்கிறீர்கள். இராஜரீகமான ஆசாரியக் கூட்டத்தின் ஒரு உறுப்பினராக நீங்கள் இருப்பதால் இராஜாவுடன் உங்களுக்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்பொழுதாவது உங்கள் வாழ்க்கையில் ஒரு தேவை ஏற்படுமானால் இராஜாவிடம் அதை எடுத்துச் செல்வதற்கு நீங்கள் ஒரு பிரதிநிதியைத் தேட வேண்டியதில்லை. ஒரு பிரதிநிதியோ, மற்றொரு ஆசாரியரையோ தேட வேண்டியதில்லை.

இராஜரீக ஆசாரியராகிய உங்களுடைய நிலை இராஜாவோடு நேரடித் தொடர்பைக் கொடுக்கிறது. இந்த சிலாக்கியம் உங்களுடைய நிலையை ஒரு ஆசாரியராக விளக்குகிறது. ஆசாரியர் மக்கள் முன்பாக தேவனுடைய பிரதிநிதியாய் இருக்கிறார்கள். ஆனாலும் மக்களுடைய கருத்துகளை தேவனிடம் எடுத்துச் செல்கிறார்கள். தேவனுடைய ஒரு ஆசாரியர் செய்கிற பரிந்து பேசுதலை தீவிரமாக விரும்புகிற யாராவது ஒருவர் உங்கள் அருகே வாழ்கிறாரா? ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் தேவனைப் பார்ப்பதன் மூலம் யாராவது ஒருவர் தேவனை அறிந்துக் கொள்ளமுடியும்.

கிறிஸ்து தம்முடைய மக்கள் மூலமாக அவருடைய வாழ்க்கையை வாழ்வதால், உண்மையான அவருடைய தன்மையை அனுபவிப்பதற்கு நம்முடைய உலகம் தாகத்துடன் இருக்கிறது. கடந்த ஞாயிறு தேவச்செய்தியில் கேட்டது போல தேவன் நம்மை அழைத்த அழைப்புக்கு மேலாக, நம்முடைய உலகப் பிரகாரமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தாகும். நாம் முதலாவது ஆசாரியர்களாகவும், இரண்டாவதாக ஒரு வேலையை அணுகும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். எனவே தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் முதலாவதாக நாம் தேடுவோமாக! கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த்

நன்றி: தரிசனக்குரல் (11.02.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami