ஏன் தேவன் நம்மை தெரிந்துகொண்டார்!

தலைப்பு வசனம்

ஏன் தேவன் நம்மை தெரிந்துகொண்டார்!

அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள். And Joab the son of Zeruiah, and the servants of David, went out and met them by the pool of Gibeon. So they sat down, one on one side of the pool and the other on the other side of the pool. 2 Samuel 2:13

உண்மை சம்பவம்

லியோ ஒரு கிறிஸ்தவன் தான். ஆயினும் கிறிஸ்துவை அறியவில்லை. அமெரிக்கா நாட்டின் பாராச்சூட் படையில் பணியாற்றிய ஒரு வாலிபன். மில்வாக்கி நகரில் உள்ள ஒரு பெண்ணை விவாகம் செய்தான். அவள் கிறிஸ்துவை அறிந்த ஒரு பெண். அவளுக்கு சிறந்த கிறிஸ்தவளான ஒரு சித்தி இருந்தார்கள். அந்த அம்மையார் ஜெபிப்பதிலும் ஆலோசனை கொடுப்பதிலும் சிறந்தவர்கள்.

லியோ பணியாற்றிய இடம் மில்வாக்கி நகரிலிருந்து சுமார் 1400 மைல்களுக்குப்பால் இருந்தது. சாதாரணப் பயிற்சிக்குப்பின் முதன்முதலாக லியோவும் அவன் நண்பரும் பாராச்சூட் குடையைப் பிடித்துக் கொண்டு, விமானத்தை விட்டுக் குதிக்க வேண்டிய நாள் குறிக்கப்பட்டது. முதன்முறையாக விமானத்திலிருந்து குதிக்கும் அனுபவம் சற்று பயங்கரமானதுதான். லியோவும் அவன் நண்பரும் நடுக்கத்தோடு அந்நாளுக்காகக் காத்திருந்தனர். தனது நடுக்கத்தை மில்வாக்கியில் உள்ள தன் மனைவிக்கு தெரிவித்து அவளையும் கலங்க வைக்க லியோ விரும்பவில்லை. ஆயினும் தன் மனைவியின் சித்தியின் ஆலோசனையைப் பெறவும், அவ்வம்மையாரைத் தனக்காக ஜெபிக்கச் சொல்லவும் லியோ விரும்பினான்.

ஒருநாள் தொலைபேசி மூலம் லியோ அந்த அம்மையாரோடு தொடர்புகொண்டான். தனது பயத்தைத் தன் மனைவிக்குத் தெரிவிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டான். அவர்களை தனது பாதுகாப்புக்காக ஜெபிக்கும்படி கேட்டான். தகுந்த ஆலோசனை கொடுப்பதில் அனுபவுமுடைய அந்த அம்மையார் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் இரட்சிக்கும் வல்லமையைப் பற்றிச் சுருக்கமாகவும் விளங்கும்படியும் எடுத்துச் சொன்னார். இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவமன்னிப்படைந்த மனிதன் எந்த மோசமான சூழ்நிலையிலும் பயமின்றிப் பணியாற்ற முடியும் என்பதை லியோ அறிந்துகொண்டான்.

ஏன் தேவன் நம்மை தெரிந்துகொண்டார்!
ஏன் தேவன் நம்மை தெரிந்துகொண்டார்!

தானும் அந்த நிலையை அடைய ஆசித்தான். கொஞ்ச நேரமே அம்மையாரோடு பேசிய போதிலும், அவ்வளவு நேரத்திற்குள் அம்மையாரோடு ஜெபித்து இதயத்தில் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அடைந்து கொண்டான். ஆச்சரியமான பிரகாரமாய் அவன் மனதிலிருந்த பயமும் நடுக்கமும் அகன்றது. அம்மையாரும் அவனுக்காக ஜெபிக்க வாக்குக்கொடுத்து, அவனும் இகத்திலும் பரத்திலும் வாழ்விக்கக்கூடிய வல்லவராகிய இயேசுவின் கரங்களில் தன்னை நம்பிக்கையுடன் ஒப்புவிக்க ஆலோசனை கொடுத்தார்.

அந்த நாளும் வந்தது. இரவு நேரம் பயங்கர இருள் சூழ்ந்த சமயம். வீரர்கள் குதிக்க வேண்டிய வரிசைக் கிரமம் குறிக்கப்பட்டது. லியோவின் வரிசைக் கிரமம் இரண்டு. சிவப்பு வெளிச்சம் காட்டப்படும்போது அவர்கள் ஒவ்வொருவராக குதிக்கவேண்டும். முதல் நபர் குதிக்கும் நேரம் வந்ததும், குதிக்க கதவைத் திறந்தான். ஆனால் அவன் குதிக்கவில்லை. பயத்தினால் பின்னால் திரும்பி “லியோ, நீ தைரியமாயிருக்கிறாய். இருவரும் இடத்தை மாற்றிக்கொள்ளுவோம். நீ முதலாவது குதி. பின் திரும்பவும் சிவப்பு வெளிச்சம் அடிக்கும்போது நான் குதிக்கிறேன்” என்றான். லியோ சம்மதித்தான். மரித்தாலும் இயேசுவுடனிருப்பேன் என்ற நிச்சயமிருந்ததால் அவன் பயப்படவில்லை. தன்னை இயேசுவின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு குதித்தான். பாரச்சூட் குடையும் ஏற்ற சமயத்தில் தானாக திறந்துக்கொண்டது. அவன் சுகப்பத்திரமாக ஆகாயத்தில் மிதந்தவனாக இறங்கிக்கொண்டிருந்தான்.

ஆயினும் மீண்டும் சிவப்பு வெளிச்சம் அடித்து அடுத்தவன் குதிக்கும் முன்பாக பயங்கரமான வெடிச்சத்தம் கேட்டது. ஆகாயத்தில் நெருப்பு ஜூவாலைகள் பறந்தன. சில வினாடிகளில் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. லியோ ஒருவனைத் தவிர இதர வீரர் யாவரும் மாண்டனர். லியோவோ சேதமின்றி தரையில் இறங்கினான். அடுத்த வாரத்தில் மில்வாக்கி நகர ஆலயத்தில் தன் சாட்சியைச் சொன்னான். பாவமன்னிப்பைத் தந்து பயத்தை அகற்றிய இயேசு, தமது கரத்தில் நம்பிக்கையோடு தன்னை ஒப்படைத்த லியோவை அற்புதமாய் பாதுகாத்த சம்பவத்தை கேட்ட மக்கள் உணர்த்தப்பட்டார்கள். தேவனைத் துதித்தார்கள். “மெய்யாகவே இது ஓர் இரட்டிப்பான அற்புதம்” என்றார் சபை போதகர்.

(நன்றி: உள்ளம் தொடும் உண்மை சம்பவங்கள் – ஆர். எஸ். ஜேக்கப்)

சம்பவ விளக்கம்

ஏன் தேவன் நம்மை தெரிந்துகொண்டார்

அன்பார்ந்தவர்களே, தேவன் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்துகொண்டார் என்று வேதாகமம் கூறுகிறது. (எபே. 1:4).  உலகத்தில் உள்ள மற்ற மனிதர்களைக் காட்டிலும் முக்கிய விசேஷித்தவர்களாக இருப்பதினால் தேவன் நம்மைத் தெரிந்துக்கொள்ளவில்லை. நாம் பாவிகளாய் வழிதப்பி போய்க்கொண்டிருந்தோம். அவரவர் தங்கள் தங்கள் பாதையில் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் தேவன் தாமே நம்மில் வைத்த மகா பெரிய அன்பினிமித்தம் நம்மை தெரிந்துகொண்டார். இதில் நாம் நம்மைக்குறித்து மேன்மைபாராட்ட ஒன்றுமில்லை. ஆனால் எத்தனையோ கோடி மக்கள் மத்தியில் தேவன் ஏன் நம்மை தெரிந்துக்கொள்ளவேண்டும்? நம்மை ஏன் அந்தகாரமான இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தார்? அன்பானவர்களே! கடந்த ஞாயிறு தேவசெய்தியில் நாம் கேட்டது போல நம்மைக் குறித்த தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே தேவன் அவருடைய சொந்த ஜனமாக நம்மை தெரிந்துகொண்டார் (உபா. 7:6-8). நாம் அவரை தெரிந்துக்கொள்ளவில்லை. அவர் தான் நம்மை தெரிந்துக்கொண்டார். நாம் கனி கொடுப்பதற்காகவும் அந்த கனி நிலைத்திருக்கவும் அவர் நம்மை தெரிந்துகொண்டார். தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் ஆச்சரியமானது. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமாய் எண்ணப்படுகிறவர்களையும், பலவீனமானவர்களையும், இழிவானவர்களையும், அற்பமாய் எண்ணப்படுகிறவர்களையும் அவர் தெரிந்தெடுக்கிறார். எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட மந்தை மேய்ப்பனாகிய தாவீதை முழு இஸ்ரவேலுக்கு ராஜாவாக தெரிந்தெடுத்தார். திக்கு வாயை உடைய மோசேயை முழு இஸ்ரவேலையும் அடிமைத்தன எகிப்திலிருந்து விடுதலையாக்க தெரிந்துகொண்டார். மீதியானியர்களுக்கு பயந்து ஆலைக்கு சமீபமாய் போரடித்துக் கொண்டிருந்த கிதியோனை பராக்கிரமசாலியே என்று அழைத்து, இஸ்ரவேலை அதன் எதிரிகளிடமிருந்து இரட்சித்தார். தேவன் தகுதியுள்ளவர்களை அல்ல, தகுதியில்லாதவர்களை தகுதியுள்ளவர்களாக மாற்றி, தமக்கு என்று உபயோகிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் தம்முடைய நித்திய ஜீவனை தருவதற்காக நம்மை தெரிந்துகொண்டார். மேலே வாசித்த சம்பவத்தில் நாம் காண்கிறதுபோல லியோ தேவனுடைய நித்திய ஜீவனின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டதுபோல நம் ஒவ்வொருவருக்கும் அந்த நம்பிக்கையை தேவன் தந்திருக்கிறார். அவருடைய தெரிந்துகொள்ளுதலுக்காக ஒவ்வொருநாளும் நாம் தேவனைத் துதிப்போமாக. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: லியோ

நன்றி: தரிசனக்குரல் (17.03.2019)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami