கர்த்தர் விரும்பும் மணவாட்டி சபை!

தலைப்பு வசனம்

கர்த்தர் விரும்பும் மணவாட்டி சபை

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

“He who has an ear, let him hear what the Spirit says to the churches. To him who overcomes I will give to eat from the tree of life, which is in the midst of the Paradise of God.”’

Revelation 2:7

உண்மை சம்பவம்

தனது வல்லமையான பிரசங்கங்களின் மூலமாகவும், அற்புதமான கனிகொடுக்கும் ஊழியத்தின் மூலமாகவும் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த பிரசங்கியார் என்ற பெயரைப் பெற்று விளங்குகிறார் ஜாண் சுங். சீனாவில் மட்டுமின்றி பல கிழக்காசிய நாடுகளிலும் ஜீவனுள்ள எழுப்புதல் பரவும்படி செய்த இவர் “அக்கினி ஜூவாலை” என்று கூறப்பட தகுதி பெற்றவர். 1926ம் ஆண்டு தனது 25வது வயதில் அமெரிக்காவின் ஒஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். தேவனால் தொடப்பட்ட இவர் தனது பேராசிரியப் பணி வாய்ப்புகளை உதறிவிட்டு தன் தாய்நாடான சீனாவுக்கு வந்து எழுப்புதல் கூட்டங்களை நடத்தத் துவங்கினார்.

பூசௌ என்ற இடத்தில் ஜாண் சுங்கும் அவருடைய பிரசங்கங்களை மொழிபெயர்த்த பிராங் லிங்கும் அற்புதமான ஆசீர்வாதங்களைக் கண்டார்கள். பள்ளிகளில் தேர்வு வேளையாக இருந்தபோதிலும் கூட கிறிஸ்தவ பள்ளிகளிலிருந்து மட்டுமின்றி அநேக அரசுப் பள்ளிகளிலிருந்தும் வந்து கூடினார்கள். காலை பத்து மணிக்கு ஆலயத்துக்கு வரும் அவர்கள் தொடர்ந்து மூன்று மணிக்கு நடைபெறும் அடுத்த கூட்டத்திலும் கலந்துகொள்வார்கள். இடம் பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தில் மதிய உணவுக்கு கூட வெளியே செல்வது கிடையாது. ஒருமுறை ஒரே கூட்டத்தில் நானூறு பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பரிசுத்த ஆவியானவர் வல்லமையாக கிரியை செய்தார். நூற்றுக்கணக்கான மாணவர்கள் மனதிரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். தாங்கள் செய்த தவறுகளை அறிக்கையிட்டு ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகினார்கள். தெருக்களில் களிப்போடு தேவனைத் துதித்தபடியே பாடிச்சென்றார்கள் இந்த மாணவர்கள்.

கர்த்தர் விரும்பும் மணவாட்டி சபை
கர்த்தர் விரும்பும் மணவாட்டி சபை

ஜாண் சுங்குக்கு விரோதமான எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே வந்தது. “திரும்பிச் சென்றுவிடு! இல்லாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவாய்” என்ற அச்சுறுத்தும் கடிதங்கள் அவருக்கு வந்தன. ஜான் சுங்குக்கு எதிரான வாசகங்கள் பட்டணத்து சுவர்களில் எழுதி வைக்கப்பட்டன. தினசரி செய்தித் தாள்கள் அவரை தாக்கி எழுதின. என்றாலும் ஜான் சுங் பின்வாங்கவில்லை. ஒரே மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இவர்களில் பலர் முன்பு கிறிஸ்தவர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவர்களில் 127 பேர் தங்கள் சொந்த செலவில் ஹாங்காங் சென்று, ஜூலை 4 முதல் 14 வரை நடைபெற்ற ஐந்தாவது பெத்தேல் மாநாட்டில் கலந்துகொண்டு, ஊழியத்துக்கு தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். 1931ம் ஆண்டு ஜான் சுங் முதன்முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

இப்போது 1932ல் இரண்டாவது முறையாக அவர் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு இடைப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் இந்த நற்செய்தி குழுவினர் 54,823 மைல் தூரம் பயணம் செய்து 1199 கூட்டங்களை நடத்தியிருந்தார்கள். பதிமூன்று மாகாணங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நற்செய்தி அறிவித்திருந்தார்கள். 18000 பேர் கிறிஸ்துவிக்காக தீர்மாணங்களை எடுத்திருந்தார்கள். இவர்களுக்காக தொடர்பணியும் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது. தேவன் ஜாண் சுங்கையும் இந்த நற்செய்தி குழுவினரையும் வல்லமையாக பயன்படுத்தியிருந்தார். இவ்வளவு தூரம் இடைவிடாமல் ஊழியங்களை நடத்தியிருந்த போதிலும் ஜாண் சுங் ஓய்வெடுக்க விரும்பவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட காலம் குறுகியது என்ற உணர்வை அவர் பெற்றிருந்தபடியால் தொடர்ந்து சீனாவின் வட பகுதியில் கூட்டங்களை நடத்தச் சென்றார்.

சீனாவின் வடபகுதி ஆவிக்குரியரீதியாக வறண்டு போயிருந்தது. ஆர்வமுள்ள விசுவாசிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுப்புதலுக்காக ஊக்கமாக ஜெபித்து வந்தார்கள். 1932ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் ஜான் சுங்கின் தலைமையில் பெத்தேல் குழுவினர் பீகிங் நகரில் எழுப்புதல் கூட்டங்களை நடத்தத் துவங்கினார்கள். குளிர் அதிகமாக இருந்தாலும் பலர் இரவுக் கூட்டங்களுக்கு வந்து ஜான் சுங்கின் வல்லமையான பிரசங்கங்களுக்கு செவிகொடுத்தார்கள். கூட்டம் நடைபெற்ற ஆலயம் நிரம்பி வழிந்தபடியால் சிலர் வெளியே குளிரில் நிற்க வேண்டியிருந்தது. ஒருநள் இரவு பீகிங் நகரின் தலைமை காவல் அதிகாரி கூட்டத்துக்கு வந்திருந்தார். மறுநாள் இரவு அவர் தனது குடும்பத்தார் அனைவரையும் அழைத்துவந்தார். அனைவருமே மனந்திரும்பினார்கள். அந்த போலீஸ் அதிகாரி தவறான முறையில் பணம் சம்பாதித்து ஒரு பெரிய வீட்டைக் கட்டியிருந்தார். தன் தவறுகளை அறிக்கையிட்ட அவர் அவற்றைச் சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அந்த வீட்டை விட்டுக்கொடுத்தார். கிறிஸ்துவுக்குள் வந்த அந்தக் குடும்பத்தார் ஓர் எளிய வீட்டில் தங்கள் விசுவாச வாழ்க்கையை துவங்கினார்கள்.

இவ்வாறு மனந்திரும்பியவர்களால் திரும்பச் செலுத்தப்பட்ட பணம் 20000 டாலருக்கும் அதிகமாக இருந்தது. அவர்கள் அனைவரும் பாவத்திலிருந்து விடுதலை பெற்று சாட்சி வாழ்க்கை வாழ தேவன் கிருபை செய்தார். ஆறே மாதங்களில் 33 பட்டணங்களில் 900 எழுப்புதல் கூட்டங்களை நடத்தினார். 14000 சீன மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். 3000 பேர் முழுநேர ஊழியத்துக்கு முன்வந்தனர். இவ்வாறு இவரது ஊழியத்தினால் நற்செய்தி ஊழியத்தை மேற்கொண்டவர்கள் ஆயிரக்கணக்கானோர். இந்த வல்லமையான ஊழியம் தொடர்ந்தது. தனது 44வது வயதில் மரிப்பதற்கு முன்பாக சீனாவில் மட்டுமின்றி பார்மோசா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பல நாடுகளிலும் எழுப்புதல் பரவ இவர் கடுமையாக உழைத்தார். உலகப் போரின் கொடுமைகள், புற்றுநோயின் வேதனை இவற்றின் நடுவிலும் வல்லமையான ஊழியம் செய்த இவரது வாழ்க்கை வரலாறு நம்மையும் துடிப்போடு செயல்படத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

(நன்றி: எழுப்புதல் வீரர் ஜாண் சுங்)

சம்பவ விளக்கம்

கர்த்தர் விரும்பும் மணவாட்டி சபை

அன்பார்ந்தவர்களே,  ஆட்டுக்குட்டியானவரின் மனைவி சபையாகும். கிறிஸ்தவ மணமகள் தான் உலகத்திலுள்ள எல்லாரிலும் மிக அழகானவள். அவள் சுத்தமும் கறையற்றதுமான வெண்ணாடையை அணிந்து இருக்கிறாள். கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போலவும், மேலே நீங்கள் வாசித்த சம்பவத்தில் உள்ள சீன தேசத்து போதகர் ஜாண் சுங் போலவும் இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியும் சுருக்கமும் கறையும் இல்லாமல் பரிசுத்தமாக எதிர்பார்க்கப்படுகிறாள்.

எபே. 5:23-32ன் படி கிறிஸ்துவுக்கும் பரிசுத்த மணவாட்டியாகிய சபைக்கும் இடையே உள்ள உறவை மனுஷர்கள் மத்தியில் இருக்கிற நெருக்கமான, மென்மையான, புனிதமான உறவுக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் ஊழியக்காரன், ஈசாக்குக்கு பெண் தேடுவதற்காக மிக தொலைவான நாட்டிற்கு சென்றது போல இயேசு தம் சொந்த இரத்தத்தால் வாங்கியிருக்கிற ஒரு கறைதிரையில்லாத மணவாட்டியை ஆயத்தப்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவரை உலகத்துக்கு அனுப்பியிருக்கிறார். ரெபெக்காள் சொன்னாள், “நான் போகிறேன்”.

அதுபோல கிறிஸ்துவின் மணவாட்டியும், பிரியமானவரை சந்திக்க ஆவலோடும், வாஞ்சையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்க வேண்டும். மாளிகை ஆயத்தமாய் இருக்கிறது. கல்யாண விருந்தும் ஆயத்தமாய் இருக்கிறது. ஆனால் மணவாட்டி இன்னும் ஆயத்தமாகவில்லை. இது நம்முடைய பரமபிதாவை வேதனைப் படுத்தும். அதை சற்று யோசியுங்கள். சபைகள் ஆத்துமாக்களை ஆயத்தப்படுத்துவதிலும் சபையின் ஆவிக்குரிய வளர்ச்சியிலும் சபை அதிக ஊக்கமாகவும் உண்மையாகவும் செயல்பட்டிருந்தால் அது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கும்.

அப்படியென்றால் இப்போது மணவாட்டியும் ஆயத்தமாய் இருந்திருக்கும். ஆண்டவருடைய வருகையும் துரிதப்படுத்தப்பட்டிருக்கும். அவருடைய வேலைகளை நாம் ஊக்கமாக செய்யும்போது நடு இரவு ”இதோ மணவாளன் வந்துவிட்டார்” என்ற சத்தத்தை கேட்க ஆயத்தமாய் இருப்போம். மணவாளனுடைய வருகைக்காக நீங்கள் காத்திருக்கும் போது பாடல்கள் பாடிக்கொண்டே இருங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: ஜாண் சுங்

நன்றி: தரிசனக்குரல் (10.02.2019)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami