சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்!

தலைப்பு வசனம்

அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். For He spoke, and it was done; He commanded, and it stood fast. Psalms 33:9

உண்மை சம்பவம்

குஜராத்தில் உள்ள “கன்காரியா’ ஏரியிலிருந்து ஒரு முதலை தப்பி ஒரு வீட்டிற்குள் புகுந்து விட்டது! வீட்டிலுள்ளோர் அலறிஅடித்துக்கொண்டு ஒடினர். அப்போது வீட்டிலிருந்த சிறுவன் கொஞ்சம் கூட பயமில்லாமல் இரும்புத் தட்டு ஒன்றைக் கம்பியால் தட்டி ஓசை எழுப்பி அதை விரட்டி விட்டான்! அன்றிலிருந்து இந்தச் சிறுவனுக்கு மிருகங்களை கவனிப்பது மிவும் பிடித்தமான பொழுது போக்காய் இருந்தது!. மிருகங்களுக்கு சேவை செய்வதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுவிட்டான் அந்தச் சிறுவன்! அந்தச் சிறுவன் பெயர் ரூபன் டேவிட்! .

19-9-1912 இல் குஜராத்தில் பிறந்த ரூபன் டேவிட் அகமதாபாத்தில் உள்ள மிருகக் காட்சிசாலை தோன்றக் காரணமாய் இருந்தவர் ஆவார்!தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயின் காரணமாக 1969 ஆம் ஆண்டு இவர் தனது பேசும் திறனை இழந்து விட்டார்! ஆனாலும் மனம் தளராமல் மிருகங்களுக்குத் தனது சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார்!

 சொல்ல ஆகும்,  கட்டளையிட நிற்கும்!
 சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்!

அது 1980 ஆம் ஆண்டு. ஹைபர் ஆக்டிவிடி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் இருந்தான். அவனைக் கட்டுப்படுத்துவது அவனது பெற்றோருக்குப் பெரும்பாடாய் இருந்தது. அச்சிறுவனின் நிலையைக் கண்ட ரூபன் டேவிட் அவனிடம் நாய்க்குட்டி ஒன்றைக் கொடுத்தார். ”இதை வீட்டில் வளர்ப்பதன் மூலம் உங்கள் மகனின் நடத்தையில் முன்னேற்றம் கிடைக்கும்.

ஒரு மாதத்திற்குள் உங்கள் மகனின் நடத்தையில் மாற்றம் தெரியும். அப்படி இல்லையெனில் இந்த நாய்க்குட்டியை இங்கேயே மீண்டும் கொடுத்துவிடுங்கள்!” என்று அந்தப் பெற்றோரிடம் சைகையில் கூறினார். அவர் கூறியது போலவே அந்தச் சிறுவனின் நடத்தையில் முன்னேற்றம் தெரிந்தது. அந்த நாய்க்குட்டியைப் பிரிய மனமில்லாத அவன் அதைத் தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

ரூபன் டேவிட் – ஊழியம்

ரூபன் டேவிட் இஸ்ரேல் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். பல நூறு ஆண்டுகளுக்குமுன் வியாபாரம் செய்ய வந்த இவரது முன்னோர்கள் குஜராத் மாநிலத்திலேயே தங்கி விட்டனர்.அந்நாட்களில் கால்நடை மருத்துவமனைகளோ, கால்நடை மருத்துவர்களோ இல்லை. கிராமத்தில் ஒரிருவர் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மூலிகைகளை மருந்தாகக் கொடுப்பர்.

அப்படிப்பட்ட முதியவர் ஒருவரைச் சந்தித்த டேவிட் அவரிடம் மூலிகை மருந்துகள் பற்றி அறிந்துகொண்டார். இதன் மூலம் கால்நடைகளைப் பராமரித்தல் மற்றும் அவற்றிற்கு மருத்துவம் செய்தல் போன்ற திறமைகளை தானே வளர்த்துக்கொண்டார்.இதனால் சுற்று வட்டார மக்கள் தம் கால்நடைகளைப் பராமரிக்க இவரையே அணுகினர். மேலும் இவர் காடுகளில் தப்பித்து வரும் வனவிலங்குகளையும் எவ்வித பயமின்றிப் பிடித்து மீண்டும் காட்டுக்குள்ளேயே விட்டு வந்தார்.

அந்நாட்களில் மக்கள்தொகை அதிகம் இல்லாததால் காடுகள் அதிகம் இருந்தன. மேலும் போக்குவரத்து சாதனங்களும் மிகக் குறைவாக இருந்தன. ரூபன் டேவிட் காடுகளில் தனியாகப் பயணம் மேற்கொண்டார். தன்னுடன் தனது மருத்துவ உதவிப் பெட்டியையும் எடுத்துச் செல்வார். காயமடைந்த பல வனவிலங்குகளுக்கு இவர் மருத்துவ உதவி புரிந்தார். மிருகங்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்திருந்தால் அவற்றை விரைவில் குணப்படுத்த பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்துகளை இவர் பயன்படுத்தினார்.

சாமானிய மக்கள் முதல் வனச்சரக அலுவலர்கள் வரை இவரது மருந்துகளைப் பயன்படுத்தி வந்தனர்.இவரைப் பற்றியும் இவரது சேவைகள் பற்றியும் அறிந்த அகமதாபாத் முனிசிபல் கார்ப்பொரேஷன் 1951 ஆம் ஆண்டு மிருகக்காட்சி சாலை அமைக்குமாறு இவரை வேண்டியது. தனது மனைவி “சாரா’ மற்றும் சகோதரர் டாக்டர் ஜோசப் டேவிட் அவர்கள் உதவியுடன் மிருகக்காட்சி சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதற்காக அடர்ந்த வனப்பகுதி ஒன்றைத் தேர்வு செய்தார். மேலும் அப்பகுதியில் பல குளங்களை வெட்டினார். முதலில் நீர்ப்பறவைகள் பல அக்குளங்களை நாடி வரத் தொடங்கின.

அவற்றைத் தொடர்ந்து வனவிலங்குகள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இவ்வாறு ஒரு முழுமையான மிருகக் காட்சிசாலையாக மாற ஐந்து ஆண்டுகள் பிடித்தது.இம்மிருகக் காட்சி சாலையை ஒட்டிய பகுதியில் “பால் வாடிகா’ எனப்படும் சிறுவர் பூங்கா ஒன்றையும் அமைத்தார். மேலும் இறந்த விலங்குகளின் உடலைப் பதப்படுத்தி இயற்கை அருங்காட்சியகம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.

குஜராத் மக்கள் இவரைப் பெரிதும் போற்றுகின்றனர்.இத்தனை சாதனைகளையும் தன் புற்று நோயுடன் போராடிக்கொண்டே செய்துள்ளார். 1969 ஆம் ஆண்டு இவருக்கு புற்று நோய் தாக்கியவுடன் மருத்துவர்கள் இவர் இரண்டே மாதத்தில் இறந்து விடுவார் என்று கூறினர்.ஆனால் அதை முறியடித்து மேலும் 20 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 24-3-1989 அன்று காலமானார் இந்த சாதனையாளர்!

(நன்றி: சிறுவர்மணி, தினமணி)

சம்பவ விளக்கம்

சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்!

அன்பார்ந்தவர்களே, தேவனுடைய பிள்ளைகளே, இன்றைக்கும் கூட பல பிரச்சினைகளினால் நீங்கள் கலங்கி கொண்டிருக்கலாம். பல போராட்டங்களினால் தியங்கி கொண்டிருக்கலாம். இன்றைக்கு ஆண்டவரைப் பார்த்து, ஆண்டவரே எனக்காக பேசும், எனக்காக ஒரு வார்த்தை சொல்லும், எனக்காக கட்டளையிடும் என்ற ஒரு எதிர்பார்ப்பான ஜெபத்தை செய்யுங்கள். நிச்சயமாகவே அவர் உங்களுக்காக பேசுவார். கட்டளையிடுவார். கடந்த ஞாயிறு தேவ செய்தியில் கேட்டது போல “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” (லூக் 7:7) என்று நூற்றுக்கு அதிபதி இயேசுவைப் பார்த்து அன்போடு வேண்டிக்கொண்டார்.

அவர் கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையை அறிந்திருந்தார். இயேசுகிறிஸ்து கஷ்டப்பட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து தன் வேலைக்காரனை தொட்டு குணமாக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் அவர் சகலவற்றையும் சிருஷ்டித்தவர். அவர் சொல்ல சொல்ல சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. (எபி. 11:3). கர்த்தருடைய வார்த்தையில் அதிகாரமுண்டு. ஒரு சாதாரண நூற்றுக்கு அதிபதியின் வார்த்தையில் அதிகாரம் இருக்கிறது. ஒரு வேலைக்காரனை ‘வா’ என்றால் வருகிறான். ’போ’ என்றால் போகிறான். காரணம் அது ரோம அரசாங்கம் அந்த நூற்றுக்கு அதிபதிக்கு கொடுத்த அதிகாரம்.

ஆனால் அவனுக்கு இயற்கையின் மேல் அதிகாரம் இல்லை. பிசாசின் மேல் அதிகாரம் இல்லை. வியாதியின் மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும். ஆகவே கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பதற்கு ஏதுவில்லாத அவிசுவாசம் உங்கள் உள்ளத்தில் குடிகொண்டு இருக்குமானால் அதை அகற்றிவிட்டு, ஆண்டவரே உம்மை நம்புகிறேன். உம்மை விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்யும் என்று கேளுங்கள்.

மேலே நீங்கள் வாசித்த சம்பவத்தில் சொல்லப்பட்டதைபோல குஜராத்தில் பிறந்த ரூபன் டேவிட் 1969ம் ஆண்டில் தொண்டை புற்றுநோய் காரணமாக பேசும் திறனை இழந்த நிலையில் இரண்டே மாதத்தில் இறந்துவிடுவார் என்று வைத்தியர்கள் கூறியிருந்தாலும், கர்த்தரை சார்ந்து கொண்டதன் நிமித்தம் தேவன் 20 ஆண்டுகள் அதன் பிறகு வாழ உதவி செய்தது போல நிச்சயமாகவே உங்கள் வாழ்க்கையிலே ஒரு அற்புதம் செய்வார் . கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: ரூபன் டேவிட்
நன்றி: தரிசனக்குரல் (25.08.2019)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami