தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்!

தலைப்பு வசனம்

தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்

சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். When the Lord has washed away the filth of the daughters of Zion, and purged the blood of Jerusalem from her midst, by the spirit of judgment and by the spirit of burning, Isaiah 4:4

உண்மை சம்பவம்

பாகிஸ்தானில் ஒரு செல்வந்த வைதீக முஸ்லிம் குடும்பத்தில் குல்ஷான் என்ற பெண் அக்குடும்பத்தின் கடைசி மகளாக பிறந்தார். பிறவியிலேயே ஒரு கையும் ஒரு காலும் விளங்காத ஊனப் பிள்ளையாகப் பிறந்தார். அவருடைய தந்தை அவர்மேல் அதிகப் பிரியம் வைத்து அதிகப் பணம் செலவு செய்து பல நாட்டு பிரபல வைத்தியர்களிடம் கொண்டுபோய் வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. புனித யாத்திரை போய் மெக்காவில் தொழுதுகொண்டால் சுகம் கிடைக்கும் என்று எண்ணி குல்ஷான் 14 வயதாயிருக்கும்போது மெக்காவுக்கு கூட்டி கொண்டு போனார். ஹஜ் யாத்திஐ ம்டித்து வந்தும் ஒரு பயனுமில்லை. குல்ஷானின் அண்ணன்மார், அக்காள்மார் யாவருக்கும் மணம் முடித்து சில ஆண்டுகளில் குல்ஷானின் தந்தையும் காலமானார். குல்ஷானைக் கவனித்துக் கொள்ள அவருடைய சித்தியும், சித்தப்பாவும் அங்கேயே இருந்தனர்.

தகப்பனார் இறந்தபின் குல்ஷான் அதிக மனமடிவடைந்தார். ஒரு நாள் மனமடிவோடு கண்ணீர்விட்டு அழுது நான் ஏன் இவ்வுலகில் வாழ வேண்டும் என்று இறைவனிடம் கேட்ட பொழுது, “குருடருக்கு பார்வை கொடுத்தது யார்? பிணியாளிகளை சுகப்படுத்தியது யார்? மரித்தோரை உயிரோடு எழுப்பியது யார்? மரியாளின் மகன் இயேசுவல்லவா. நானே அந்த இயேசு. குர் ஆனில் சூரா மரியாமில் வாசித்துப் பார் என்ற சத்தம் கேட்டது. அதன்படி குர் ஆனை வாங்கிப் படித்து, பின்னர் இந்த இயேசுவை பற்றி அதிகம் அதிகமாக தியானம் பண்ணி, “இயேசுவே என்னை குணமாக்கும்” என்று விடாப்பிடியாக அழுது ஜெபம் பண்ணியபொழுது இயேசுவும் அவரோடுகூட பன்னிரண்டு சீஷர்களுடன் அவர் படுத்திருந்த அறையில் தரிசனமானார்கள்.

இருட்டில் மூடப்பட்டிருந்த அறை ஒரே பிரகாசமாக இருந்தது. “ஓ தேவனே” என்று குல்ஷான் அலறினார். அப்பொழுது மத்தியில் நின்ற இயேசு “நீ எழுந்திரு. நீ தேடிய இயேசு நானே, நீ என்னண்டைக்கு வா” என்று கூறினார். “எப்படி முடியும் ஆண்டவரே, நான் 19 வருடங்களாய் முடமாயிருக்கிறேனே” என்று குல்ஷான் கூற, அவர், இரண்டாம் தரமும் மூன்றாம் தரமும் “நீ எழுந்து வா, எழுந்து நில், நானே இயேசு” என்று கூறினார். அப்பொழுது குல்ஷான் எழுந்து நின்றார். ஒன்று இரண்டு அடிகள் தானாக எடுத்து வைத்து நடந்தார். சந்தோஷ மிகுதியில் பாதங்களில் விழுந்து, நன்றி கூறி பணிந்து கொண்டார். அந்த காட்சி கொஞ்சங் கொஞ்சமாக மறைந்தது. குல்ஷனின் சூம்பிய கைகளும், கால்களும் மற்ற கால், கையைப் போல் மாறியிருந்தது. அதுமுதல் இயேசுவின் சீஷியாக நற்செய்தியைப் பரப்பத் துவங்கினார்.

தம் குடும்பத்தினரிடமிருந்தும், மற்ற வைதீக முஸ்லிம்களிடமிருந்தும் அவருக்குப் பெரிய எதிர்ப்புகள் எழும்பின என்றாலும் அவர் இயேசுவுக்குச் சாட்சியாக பல ஊர்களிலும் சுற்றி சுவிசேஷத்தை அறிவித்தார். அவருடைய ஒரு அக்காள் இயேசுவை ஏற்றுக் கொண்டு இரகசிய கிறிஸ்தவராகவே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் லாகூரில் போர்மென் கிறிஸ்தவக் கல்லூரியில் மெதடிஸ்ட் ஆலயப் போதகர் குல்ஷானை புது வருட ஆராதனையில் ஆண்டவருடைய வசனத்தைக் கூறும்படி அழைத்தார். ஆனால் குல்ஷானோ அப்பேர்ப்பட்ட மிகப் படித்துப் பட்டம் பெற்ற சபையில் தான் எப்படி பேசுவது என்று மலைத்தார். அப்பொழுது அவர் செவிகளில், “நீ என் மக்கள் மத்தியில் சென்று பிரசங்கிப்பாயாக” என்று ஆண்டவர் கூறும் சத்தம் கேட்டது. அப்படியே முதலாவது அப்பெரிய சபையில் ஆண்டவருடைய செய்தியைக் கூறினார். அதுமுதல் பல சபைகளிலும் அவர் சாட்சிகூற அழைக்கப்பட்டார்.

தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்!
தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்!

1981ம் ஆண்டு ஜூலை மாதம் அது. குல்ஷான் கராச்சியில் ஒரு அம்மாளுடன் அக்தர் காலனியில் தங்கியிருந்தார். அப்பொழுது ஜின்னா மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்து வந்த தனது தங்கை ப்ரீடாவை பார்க்க வரும்படி வாலிப செவிலியாகிய பாட்ரீஷியா அழைத்தாள். ப்ரீடா ஒரு பொல்லாத ஆவியினால் பிடிக்கப்பட்டிருப்பதாக பாட்ரீஷியா கருதினாள். அப்பொல்லாத ஆவி அவள் மேல் வரும்போதெல்லாம் அவள் கூச்சலிட்டு பிறரை அடிப்பதாகவும் சொன்னாள். குல்ஷான் ப்ரீடாவைப் போய்ப் பார்க்க ஒத்துக் கொண்டார். ரிக்‌ஷா எடுத்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். ப்ரீடா தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். அப்போதைக்கப்போது தன் தலையை நிமிர்த்தி குல்ஷானை முறைத்துப் பார்த்தாள்.

பாட்ரீஷியா அவளைப் பார்த்து மிருதுவாகப் பேசினாள். “பாஷி இவர்கள்தான் சகோதரி குல்ஷான். உனக்கு ஜெபிக்கும்படி வந்திருக்கிறார்கள்.” ப்ரீடாவிடத்திலிருந்து பதில் வரவில்லை. அவள் சிறிது நேரம் அமைதியாக நின்றாள். திடீரென ஏதோ சாக்கு சொல்லி அவ்வறையில் இருந்து வெலியேறி குளியலறைக்கு சென்று விட்டாள். பதினைந்து நிமிடங்கள் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. பாட்ரீஷியா அவளைத் தேடிச் சென்றாள். சிறிது நேரத்தில் மனமில்லாமல் இருந்த அவ்வாலிபப் பெண்ணைக் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு வந்து குல்ஷான் முன் நிறுத்தினாள். ப்ரீடா ஒரு சிறு கம்பளத்தின்மேல் உட்கார்ந்தாள். அருகிலிருந்த ஒரு சாய்வு நாற்காலியில் குல்ஷான் அமர்ந்து, ப்ரீடாவை தன் அருகில் தரையில் உட்கார செய்தார். அதன்பின் தன் கையை அவள் தலையின் மேல் வைத்து வேதாகமத்தில் 91ம் சங்கீதத்தை திறந்து அதிலிருந்து சத்தமாக வாசித்தார்.

சில வசனங்களை வாசித்தபின் அப்பெண் தன் கண்களை மூடினாள். தன் கையை அவள் தலையின் மேல் வைத்த வண்ணமாக “இயேசுவின் நாமத்தினாலே நான் உனக்கு கட்டளையிடுகிறேன். இவளை விட்டு வெலியே போ” என்று சத்தமாய் ஜெபித்தார். அப்பெண் பலமாக நடுங்க அரம்பித்தார். பலத்த சத்தத்தோடு கூச்சலிட்டு ”என்னை போகவிடு, நான் எரிந்துக்கொண்டிருக்கிறேன்” என்று அலறினாள். ”பிசாசானவன் உன்னை எரிப்பதைப் காட்டிலும் நீ எரிக்கப்படுவது உனக்கு நலமாக இருக்கும்” என்றார் குல்ஷான். அப்பொழுது பிசாசே பேசிற்று. அப்பெண்ணுக்குரிய மெல்லிய குரலாக இல்லாமல் வித்தியாசமான குரலாக இருந்தது. “நான் வெளியே செல்கிறேன். என்னைப் போக விடுங்கள். நான் இவளுக்குள் திரும்ப வரமாட்டேன்” பிசாசு அவளை விட்டு நீங்கியபோது அவள் தரையில் கீழே விழுந்து அசைவற்றவளாய் கிடந்தாள்.

அவளது உடல் நன்றாக இளைப்பாறியது. பத்து நிமிடங்கள் கழித்து அவள் எழுந்து உட்கார பாட்ரீஷியா உதவி செய்தாள். ப்ரீடா கொஞ்சம் தண்ணீர் கேட்டாள். அவள் தண்ணீர் குடித்தபின்பு தன்னண்டை மறுபடியும் வந்து உட்காரும்படி அழைத்தார். இம்முறை அவள் வந்து தனது தலையை குல்ஷான் முழங்காலில் சார்த்தி ”தயவு செய்து எனக்காக ஜெபியுங்கள், நான் மிக இலகுவாக இருப்பது போல் உணருகின்றேன்” என்றாள். குல்ஷான் அவள் திரும்ப சொல்லும்படியாக ஒரு ஜெபத்தைக் கற்றுக் கொடுத்து ஜெபித்தார். மாலை 7 மணி ஆயிற்று. அநேக செவிலியர் அறைக்குள் வந்தனர். என்ன நடந்தது என்பதை அவர்கள் அறியவந்தபோது தங்களது பிரச்சனைகளை குல்ஷானிடம் கூறி ஜெபிக்க வேண்டினர். பரீட்சை, தலைவலி, உறவினர்களின் சுகவீனம் போன்ற அநேக பிரச்சனைகளுக்காக ஜெபித்தார். பாட்ரீஷியாவும் ப்ரீடாவும் இயேசுவுக்கென்று அழகான சாட்சிகளாக ஜீவிக்கின்றனர்.

(நன்றி: கிழியுண்ட திரை)

சம்பவ விளக்கம்

தேவன் நம் பேரைப் பெருமைப்படுத்துவார்

அன்பார்ந்தவர்களே,  ஜீவபுஸ்தகத்திற்கு கிரேக்க மொழியில் பிப்லாஸ் என்று பெயர். மோசே ஜெபிக்கும் போது, இஸ்ரவேலரின் மனக்கடினத்தினிமித்தம் கர்த்தர் அவர்களை தண்டிக்க நினைத்தபோது அவர்களுக்கு பதிலாக தன் பேரைக் ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப் போடும்படி ஜெபிக்கிறார். (யாத். 32:32) அதற்கு கர்த்தர் பிரதியுத்திரமாக, “எனக்கு விரோதமாக பாவம் செய்தவனெவனோ அவன் பேரை ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்” என்கிறார்.

ஒரு மனிதனுடைய பெயர் ஜீவபுஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடப்படுவது எத்தனை பரிதாபத்திற்குரியது! ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்படாதவனாக காணப்படுகிறவனின் நிலைமையைக் குறித்து வேதம் சொல்லும்போது அப்படிப்பட்டவர்கள் அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள் (வெளி. 20:15) என்றும் அவர்கள் பிசாசிடம் ஒப்படைக்கப்படுவார்கள் (வெளி. 13:8) என்றும் அவர்கள் தான் பிசாசாகிய மிருகத்தை வணங்குவார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் கர்த்தருக்காக வைராக்கியமாய் நிற்பவர்களுடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு திடநம்பிக்கை உண்டு. பவுல் பிலிப்பியருக்கு எழுதும்போது அவரோடு ஊழியத்தில் பாடுபட்டவர்களின் நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக கூறுகிறார்(பிலி. 4:3).

இயேசுவினுடைய எழுபது சீடர்கள் திரும்பி வந்து தங்களுக்கு பிசாசுகள் கீழ்படிந்ததைக் கூறியப்போது, அதற்கு சந்தோஷப்படாமல் “உங்கள் நாமம் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்” என்றார். நாமும் கூட நம்முடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதற்காக சந்தோஷப்படுவோம். மேலும் நம்முடைய பெயர்கள் என்றும் அதில் நிலைத்திருக்கத்தக்கதாக நாம் கர்த்தரில் நிலைத்திருப்போம். மேலும் பலருடைய பெயர்கள் அதில் எழுதியிருக்கத்தக்கதாக நாம் அநேகரை இயேசு கிறிஸ்துவண்டைக்கு வழிநடத்துவோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: குல்ஷான்

நன்றி: தரிசனக்குரல் (08.04.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami