தேவன் பரலோகத்தில் இருக்கிறார்!

தலைப்பு வசனம்

“நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். But our God is in heaven; He does whatever He pleases. Psalms 115:3”

உண்மை சம்பவம்

பிரேசில் நாட்டில் அன்டோனியோ கார்லோஸ் சில்வா என்ற மனிதன் மாடோ கிராசோ என்ற ஊருக்கு அவசரமாகப் போக எண்ணி ஒரு வாகனமும் கிடைக்காமல் கடைசியில் ஒரு லாரியை நிறுத்தி அதில் ஏறினார். அந்த லாரி ஓட்டுனர் ஒரு கிறிஸ்தவர். ஓட்டுனர் எப்படியெப்படியோ அன்டோனியோவைப் பேச்சுக்கிழுத்தும் அன்டோனியோ பேசாமல் கடைசிவரை மெளனமாகவே வந்தார்.

தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டார். அப்பொழுது அந்த லாரி ஓட்டுனர் ஒரு நிமிடம் அவரை நிற்கச்சொல்லி தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு புதிய ஏற்பாட்டை எடுத்து “தயவு செய்து உமக்கு சமயம் வாய்க்கும் போது இதை வாசியும்” என்று சொல்லிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். அன்டோனியாவும் வேண்டா வெறுப்பாய் அந்தப் புதிய ஏற்பாட்டை வாங்கித் தன் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு தன் அலுவலைப் பற்றிய ஆலோசனையிலேயே அமிழ்ந்து நடந்தார்.

அநேக மாதங்கள் கழித்து ஒரு நாள் அந்த லாரி ஓட்டுனர் ஆலயத்துக்கு போனபொழுது அங்கே அன்டோனியாவை பார்த்தார். கிட்ட போய் “எனக்கு உம்மைத் தெரியுமென்று நினைக்கிறேன்” என்றார். அதற்கு அன்டோனியோ: “தெரியுமாவா? அன்றொரு நாள் உமது லாரியில் மாடோ கிராசோ என்ற ஊருக்கு பிரயாணம் பண்ணினதை மறக்க முடியுமா? அப்பொழுது நீர் எனக்கு ஒரு புதிய ஏற்பாட்டைக் கொடுத்தீரே. அன்று நான் ஒரு மனிதனை கொலை செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தேன்.

தேவன் பரலோகத்தில் இருக்கிறார்!
தேவன் பரலோகத்தில் இருக்கிறார்!

ஆகையால் உம்மிடம் ஒன்றும் பேசவில்லை . உம்மை விட்டு சிறிது தூரம் சென்றவுடன் யாரோ என் சட்டையைப் பிடித்து இழுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது; பார்த்தால் ஒருவரையுங் காணோம். அவ்விடத்திலேயே உட்கார்ந்தேன். சற்று நேரம் கழித்து நீர் கொடுத்த அந்த புதிய ஏற்பாட்டை எடுத்து வாசிக்கத் துவங்கினேன்; வாசித்து வாசித்துக் கடைசியில் அந்த மனிதனை நான் கொல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். இப்பொழுது நான் ஒரு மனந்திரும்பிய கிறிஸ்தவனாக இருக்கிறேன்” என்று புன்முறுவலோடு கூறினார்.

ஒரு லாரி ஓட்டுனர் கொடுத்த ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தால் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஒன்று அன்டோனியோ கொலை செய்யப்போன மனிதன்; இரண்டாவது அன்டோனியோ இயேசு கிறிஸ்துவில் நித்திய வாழ்வை சுதந்தரித்துக் கொண்டார். கர்த்தருடைய வார்த்தை வெறுமனே திரும்பி வராது. அதைக் கேட்டவனுடைய இருதயத்தில் அது கிரியை செய்யும். கர்த்தருடைய நற்செய்தியைக் கூற வேண்டியது நமது கடமை; ஆண்டவர் கிரியை செய்வார்.

(நன்றி: அருளுரை உபமானங்கள்)

சம்பவ விளக்கம்

தேவன் பரலோகத்தில் இருக்கிறார்

அன்பார்ந்தவர்களே,  பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, என்று ஒவ்வொருமுறையும் ஜெபிக்கும் போதெல்லாம் நம்முடைய பிதா பரலோகத்தில் இருக்கிறார் என்பதை உணருகிறோம். அது அவருடைய வாசஸ்தலம், அது ஒளிமயமான தேசம். பரலோகத்தில் இருக்கும் பிதாவின் மகிமையால் பரலோகம் முழுவதும் நிரப்பப்பட்டிருக்கிறது. பரலோகம் எங்கு இருக்கிறது? எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? என்பதைக் குறித்து நாம் திட்டமாய் அறியமுடியவில்லை என்றாலும் வானாதி வானங்களுக்கு மேலாகப் பிதாவானவர் இருக்கிறார் என்பதை விசுவாசித்தினால் நாம் அறிகிறோம்.

பரலோகத்தில் இருக்கிற பிதா ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி. 1:1). அப். பவுல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 கொரி. 12:2). ஆனால் பரலோகம் வானாதி வானங்களுக்கும் மேலாக உன்னதமான இடத்தில் இருக்கிறது. அது தேவனால் கட்டப்பட்ட நித்திய வீடாகும். இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்யத்தைக் குறித்து பேசும்போது, ”என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு” என்று சொன்னார் (யோவான் 14:2). “சோதிகளின் பிதா” என்று அழைக்கப்படும் பிதாவாகிய தேவன் அங்கே குமாரனுடன் மகிமையாய் வாசம் செய்கிறார்.

அங்கே ஆயிரமாயிரமான தேவதூதர்கள் இருக்கிறார்கள், பூமியிலே தங்கள் ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தப் பரிசுத்தவான்களுக்குப் பரலோகம் ஒரு இளைப்பாறுகிற ஸ்தலமாக இருக்கிறது. ”ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. (எபி. 4:9). “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை ” (யோவான் 3:13). மனுபுத்திரருக்கு இரட்சிப்பை உண்டாக்கி, மண்ணுக்குரியவர்களை விண்ணுக்குரியவர்களாக மாற்றும்படி இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். மேலே நாம் வாசித்த சம்பவத்தில் காண்கிறது போல “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16). இயேசுகிறிஸ்து ஒருவரே பூமியையும் வானத்தையும் இணைக்கும் யாக்கோபின் ஏணியானார்.

ஒரே நேரத்தில் அந்த ஏணியின் நுனி பரலோகத்தையும் பூமியையும் தொட்டுக் கொண்டிருப்பதைப்போல, இயேசு தேவகுமாரனாகவும், மனுஷகுமாரனாகவும் விளங்கினார். இயேசு இந்த உலகத்தில் வந்து கல்வாரிச் சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்து உயிரோடு எழுந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறக் காட்சியை சீஷர்கள் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக் கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. (அப். 1:9). ”அவர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்” (மாற்கு 16:19). இயேசுகிறிஸ்துவைக் குறித்து எபிரெயர் நிருப ஆக்கியோன் எழுதும்போது, நம்முடைய ‘பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்’ (எபி. 1:3).

பரலோகத்திலே பிதாவின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிற இயேசுகிறிஸ்து என்ன செய்துகொண்டிருக்கிறார்? கடந்த ஞாயிறு தேவசெய்தியில் நாம் கேட்டது போல உங்களுக்காகவும் எனக்காகவும் வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார். பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். ”நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” (ரோமர் 8:34). ”என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு: அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே, நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். (யோவான் 14:2,3). இயேசு சொல்லுகிறதை சற்று கவனித்துப் பாருங்கள்.

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் இருந்தாலும் நான் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன் என்று சொன்னார். அவர் நமக்காக கடந்த இரண்டாயிரம் வருடங்களாகச் கட்டிக் கொண்டிருக்கும் பரலோக வாசஸ்தலம் எவ்வளவு அருமையாய் இருக்கும்! ‘நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி’ என்று இயேசு சொன்னார். நாம் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோடோ அல்லது தேவதாகர்களோடோ இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள் அல்ல.

கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ அங்கே அவரோடேகூட இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். ஏனெனில் நாம் அவருடைய மணவாட்டியாக அவருடைய மாம்சத்திற்கும் இரத்தத்திற்கும் உரிமையானவர்கள். ஆகவே கிறிஸ்துவோடே கூட யுகயுகமாக வாழ்ந்திருப்போம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: அன்டோனியோ கார்லோஸ் சில்வா

நன்றி: தரிசனக்குரல் (18.12.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami