நன்மையைத் தருவேன், கொழுமையைச் சாப்பிடுவீர்கள்!

தலைப்பு வசனம்

நன்மையைத் தருவேன் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்

உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

Bring your father and your households and come to me; I will give you the best of the land of Egypt, and you will eat the fat of the land.

Genesis 45:18

உண்மை சம்பவம்

டாமி லீ ஆஸ்போர்ன், ஒக்லஹோமா (Oklahoma) பகுதியில் வசித்து வந்த உருளைக்கிழங்கு விவசாயம் செய்யும் குடும்பத்தில் டிசம்பர் 23, 1923ம் ஆண்டு பிறந்தார். அந்த பெற்றோருக்கு பிறந்த பதிமூன்று பிள்ளைகளில் கடைசியாக பிறந்தவர் இவர். ஏப்ரல் 5, 1942ம் ஆண்டு தன்னைப் போலவே விவசாய குடும்பத்தில் பிறந்த டெய்சி வாஷ்பர்ன் என்பவரை மணந்துகொண்டார். அப்பொழுது அவருக்கு 18 வயது. டெய்சிக்கு 17 வயது. அதன்பின் தனது 21வது வயதிலேயே தம் மனைவியுடன் சேர்ந்து மிஷனெரி பயணமாக இந்தியா வந்தார். அந்த வயதிலேயே உலக முழுவதும் உள்ள ஆயிரம் பதினாயிரம் மக்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசத்துடனும் தைரியத்துடனும் அவர்கள் கொண்டுசேர்த்திருந்தனர். இந்த தம்பதியினர் இருவரும் தங்கள் இந்திய பயணத்தை முடித்து திரும்பியபோதே அமெரிக்கா கனடா ஆகிய நாடுகளில் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர். அவர்கள் பேசும்படியாக நற்செய்திக் கூட்டமானது பெரிய பெரிய மைதானங்களில் 10,000 பேருக்கு மேலாக கலந்து கொள்ளும்விதத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.

1950களில் இத்தம்பதியினரின் தரிசனம் அகில உலக அளவில் விரிந்தது. லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மிகப்பெரிய நற்செய்திக் கூட்டங்களை நடத்தினர். 50 ஆண்டுகளில் ஆஸ்பார்னும் அவரது குழுவும் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான ஆத்துமாக்களுக்கு நற்செய்தியை அறிவித்துள்ளனர். அவர்கள் இயற்றிய நற்செய்தி புத்தகங்களானது 80க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஊழியங்களை செய்த TL ஆஸ்பர்ன் தன்னுடைய ஊழிய அனுபவங்களை பின்வருமாறு கூறுகிறார்:

கடந்த நாற்பது ஆண்டுகளில் எழுபது நாடுகளுக்கும் மேலாக நானும் (T.L. ஆஸ்பர்ன்) எனது மனைவி டெய்சியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சென்று, தேவனுடைய எழுதப்பட்டிருக்கிற வார்த்தையில் செயலாற்றியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 20,000த்திலிருந்து 2,50,000 ஆத்துமாக்களுக்கு, நற்செய்தி கூட்டங்கள் மூலமாக கிறிஸ்துவைப் போதித்திருக்கிறோம். கணவன் மனைவியாக இணைந்து இதுவரை எந்த தம்பதியாரும் செய்திராத அளவுக்கு, கிறிஸ்தவர்கள் அல்லாத அநேகரை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தியதோடல்லாமல் மிகப் பெரிய அற்புதங்கள் நடப்பதையும் கண்டு இருக்கிறோம். இதுவரை மனமாற்றம் பெறாத பல்லாயிரக்கணக்கான மக்களை இயேசு கிறிஸ்துவின் அன்புக்குள் அழைத்து வந்திருக்கிறோம்.

நன்மையைத் தருவேன், கொழுமையைச் சாப்பிடுவீர்கள்
நன்மையைத் தருவேன், கொழுமையைச் சாப்பிடுவீர்கள்

செவிடும் ஊமையுமான ஆயிரக்கணக்கனோர் பரிபூரண சுகம் பெற்றதை நாங்கள் பார்த்திருக்கிறோம். குருடான அநேகர் – ஒரே நற்செய்திக் கூட்டத்தில் தொன்னூறு பேர் வரை – தங்கள் குருட்டுத் தன்மையிலிருந்து விடுதலை பெற்று பார்வை திரும்பப் பெற்றதை நாங்கள் பார்த்திருக்கிறோம். நம்பிக்கையற்ற முடவர்கள் – 42 வருடங்களுக்கு மேலாக தள்ளு வண்டியில் இருந்தவர்கள் – எழுந்து நடந்ததை பார்த்திருக்கிறோம். கட்டில்களிலும் மடக்கு நாற்காலிகளிலும் கொண்டு வரப்பட்டவர்கள் எழுப்பப்பட்டதையும், பரிபூரண சுகம் அடைந்ததையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். மாறுபாடான கண்கள் சீரானதையும், விரைப்பான சரீர மூட்டுகள் ஒரே நிமிடத்தில் மென்மையாகி நேராக்கப்பட்டதையும், கட்டிகள் மறைந்ததையும் பார்த்திருக்கிறோம்.

அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்ட செவிப்பறைகள், நுரையீரல்கள், சிறுநீரகங்கள், விலா எலும்புகள் மற்றும் சரீர பாகங்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமையினால் மறுபடியும் சிருஷ்டிக்கப்பட்டு சொஸ்தமாக்கப்பட்டதை கண்டு இருக்கிறோம். ஒரே கூட்டத்தில் 50,000 பேருக்கும் மேலானோர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதும், ஒரே இரவில் ஆயிரக்கணக்கானோர் இதை அறிக்கை செய்ததுமான மகிழ்ச்சியான அனுபவங்கள் எங்களுக்கு கிடைத்தன. இவ்வாறு அவர் தமது சாட்சியை பகிர்ந்துக்கொண்டார்.

(நன்றி: தேவன் என்னைத் தெரிந்துகொண்டார் – TL ஆஸ்பார்ன்)

சம்பவ விளக்கம்

நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.

அன்பார்ந்தவர்களே,  பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு நன்மையானதை கொடுக்கிறார்கள். ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு நன்மையான போதனைகளை கொடுக்கிறார்கள். போதகர்கள் விசுவாசிகளுக்கு நன்மையான ஆசீர்வாதங்களை கொண்டுவருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நம் அருமை ஆண்டவர் எப்போதும் நமக்கு நன்மையானவைகளையே தருகிறார். நன் அருமை ஆண்டவர் கேட்டார், “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால் அவனுக்கு கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்கு பதிலாய் பாம்பை கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால் அவனுக்கு தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயமல்லவா?” (லூக். 11:11-13) பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கிறார்கள். இதில் என்ன சந்தேகமும் இல்லை.

பரலோக பிதா நமக்கு தாயும் தகப்பனமாயிருக்கிறாரே. அவர் நன்மையான ஈவுகளை கொடுக்காமல் இருப்பாரோ? தாய் தேற்றுவதைப் போல தேற்றுவேன் என்று சொல்லுகிறாரே. தகப்பன் கைவிட்டாலும் நான் சேர்த்துக் கொள்வேன் என்று சொல்கிறாரே. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல இரங்குவேன் என்றும் சொல்லுகிறாரே. அவர் நன்மையான ஈவுகளை தரமாட்டாரோ? நிச்சயமாகவே உங்களுக்கு நன்மையானவைகளை தருவார். பல வேளைகளில் நாம் கர்த்தருடைய வழிகள் தெரியாமல் திகைக்கிறோம். பாடுகளும் உபத்திரவங்களும் வரும்போது நாம் தடுமாறி போய்விடுகிறோம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. இக்காலத்து பாடுகள் இனி நம்மில் வெளிப்படும் தேவமகிமைக்கு ஒருக்காலும் ஒப்பானவைகள் அல்ல. கர்த்தர் இக்காலத்து பாடுகளை நன்மையாக மாற்றிவிடுகிறார். அவரில் அன்புகூறுகிறவர்களில் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம். ரோமர். 8:28. கர்த்தர் தருகிற நன்மையானது என்ன? அவர் நமக்கு தந்திருக்கிற பாவமன்னிப்பின் நிச்சயம், இரட்சிப்பின் சந்தோஷம் தேவனுடைய பிள்ளைகளின் ஐக்கியம், பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம், நித்திய ஜீவன், எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை எல்லாம் எத்தனை மேன்மையான ஈவுகள். தேவபிள்ளைகளே, தேவன் அருளிய சொல்லி முடியாத நன்மையான ஈவுகளை எண்ணி எண்ணி ஆண்டவரை ஸ்தோத்திரிப்பீர்களா? கடந்த ஞாயிறு நாம் தேவசெய்தியில் கேட்டதுபோலவும் மேலே நீங்கள் வாசித்த சம்பவத்தில் அறிந்தது போலவும் இந்த நாளிலும் உங்களுக்கு புதிய நன்மையை தந்தருளுவார். பசுமையான ஆசீர்வாதங்களை கட்டளையிடுவார். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

Person: டாமி லீ ஆஸ்போர்ன்
நன்றி: தரிசனக்குரல் (02.12.2018)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Close Bitnami banner
Bitnami