பெந்தேகோஸ்தே என்னும் நாள் !

தலைப்பு வசனம்

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். When the Day of Pentecost had fully come, they were all with one accord in one place. Acts 2:1

உண்மை சம்பவம்

1904ம் ஆண்டு வேல்ஸ் தேசத்தில் (Wales) சுரங்கத் தொழிலாளியான இவான் ராபர்ட்ஸ் (Evan Roberts) மூலம் மாபெரும் எழுப்புதல் உண்டானது. அவர் அதிகம் படித்தவரோ அல்லது ஒரு மேடைப் பேச்சாளரோ அல்ல. ஆனால் அவருக்கு தெரிந்ததெல்லாம் ரே ஒரு புத்தகம் தான். அது வேத புத்தகம். அவர் இருதயம் கர்த்தருக்காகவும் அவருடைய பரிசுத்த வார்த்தைக்காகவும் வாஞ்சையாய் இருந்தது. இவான் ராபர்ட்ஸ், 1878ம் ஆண்டு, ஜூன் மாதம் 8ம் தேதி பிறந்தவர். அவர் தகப்பன் பெயர் ஹென்றி இராபர்ட்ஸ் (Henry Roberts) தாய் பெயர் அன்னாள் ராபர்ட்ஸ் (Hannah Roberts). கடின உழைப்பும், கர்த்தரை நேசிப்பதும், அக்குடும்பத்தின் சொத்து.

இவான் 13ம் வயதிலே கர்த்தரை ஏற்றுக் கொண்டார். “What would Jesus do” (WWJD) ”இயேசு என்ன செய்திருப்பார்” என்ற தலைப்பில் மோரியா ஆலயத்தில் (Moriah Chapel) கொடுக்கப்பட்ட செய்தி அவர் வாழ்க்கையை மாற்றி விட்டது. அன்றே கர்த்தருக்கென தன்னை அர்ப்பணித்தார். வாலிபனான இவான், எப்போதும் ஆலயத்தில் தங்கி, வேதத்தை வாசிக்கவும், மற்றவர்களோடு வேத வார்த்தைகளை குறித்து விவாதிக்கவும் ஆர்வமாயிருந்தார். தொடர்ந்து கர்த்தரை பின்பற்றி நடந்தார். 1904ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவான், சுவிசேஷகராகிய சேத் யோசுவாவிடம் போய்ச் சேர்ந்தார். சேத் யோசுவா “Bend us! Bend Us!” “எங்களை வளையும், எங்களை வளையும்” என்று ஜெபிக்க ஆரம்பித்தார். அப்போது இவான் ராபர்ட்ஸ், உள்ளத்தில் ஒரு அசைவு ஏற்பட்டது. அதன் பின்பு அவர் சாப்பிடாமல் ஜெபத்தில் தரித்திருந்தார். 1904ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தன்னுடைய முதல் தரிசனத்தை பெற்றுக்கொண்டார்.

1904ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவான் ஜெபிக்கிற வேளையில், “வேல்ஸ் தேசத்திற்கு எழுப்புதலை அனுப்பப் போகிறேன். ஒரு லட்சம் அவிசுவாசிகள் கிறிஸ்துவிடம் திரும்புவார்கள் என்றும் மேலும் இந்த எழுப்புதல் ஒரு அக்கினி போல இங்கிலாந்து, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா வரை பரவும்” என்றும் தேவன் அவரிடம் கூறினார். இவான் தான் பெற்றுக்கொண்ட வெளிப்பாடுகளை பிரசங்கிக்க ஆவலாய் இருந்தார். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இவான் தன்னுடைய பாஸ்டரிடம் எத்தனையோ முறை கேட்டும், அவர் இந்த சுரங்கத் தொழிலாளியின் வேண்டுகோளை நிராகரித்தார். கடைசியாக ஒரு நாள் “வருகிற வாரம் புதன் கிழமை இரவு ஆராதனையில், பிரசங்கம் செய். யாராவது உட்கார்ந்து கேட்பார்களானால் கேட்கட்டும்” என்று பாஸ்டர் சொன்னார்.

இவான் 1904ம் ஆண்டு, அக்டோபர் 31ம் தேதியிலிருந்து அந்த சிறு சபையில் தொடர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். செய்தி கேட்ட பாஸ்டரும் மற்ற 17 பேரும் தேவ அக்கினியால் அன்று தொடப்பட்டு எழுப்புதல் அடைந்தனர். ஆம், எழுப்புதல் அந்த சபையில் அன்று தொடங்கிற்று. இளம் வாலிபனான இவான் தேவ வார்த்தைகளை தைரியமாய் பிரசங்கித்தார். அவருடைய செய்தி மிகவும் எளிய முறையில் இருந்தது. இவருடைய எளிமையான செய்தி அநேகரை தொட்டது. எழுப்புதல் அக்கினி வேகமாகப் பரவத் தொடங்கியது. அடுத்த 30 நாட்களில் 37,000 மக்கள் மனந்திரும்பி, பாவத்தை அறிக்கையிட்டு, இயேசுவை இஅட்சகராக ஏற்றுக் கொண்டனர். ஐந்து மாதத்திற்குள் ஒரு லட்சம் பேர் இரட்சிக்கப்பட்டனர். அத்தேசம் முழுவதும் எழுப்புதல் அடைந்தது. அவருக்கு கிடைத்த தரிசனமும் நிறைவேறியது.

பெந்தேகோஸ்தே என்னும் நாள்

வேல்ஸ் தேசம் மிகப்பெரிய நல்லொழுக்க மறுமலர்ச்சியை கண்டது. இவான் ராபர்ட்ஸ் எல்லாராலும் எங்கு போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சென்றவிடமெல்லாம், மக்களின் இருதயம் கர்த்தருக்கென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. வேல்ஸ் தேசம் மிகப்பெரிய எழுப்புதலை அனுபவித்தது. சபை பாகுபாடின்றி மக்கள் ஒன்று கூடி, ஆவியில் ஒன்றுபட்டு ஆராதித்து ஜெபித்தனர். மதக் கோட்பாடுகள் தவிடுபொடியாகின. இரவு விடுதிகள், சினிமா அரங்குகள், மதுபான கடைகள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டன. அநேகர் “வேதப்பாட வகுப்புகள்” நடத்த தொடங்கினர் அரசியல் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நேரம் போவது தெரியாமல், சபை அங்கத்தினர்கள் ஆலயத்திலேயே நேரம் செலவழித்தனர். குற்றங்கள் குறைந்தன. திருட்டு, கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவை குறைந்ததால், நீதிபதிகளுக்கும், காவலர்களுக்கும் வேலையில்லாமற் போயிற்று. குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

திறந்த வெளியில் ஜெபக்கூட்டங்கள், ஆராதனைகள் நடந்தன. கர்த்தர் சொன்னபடியே இங்கிலாந்தில் எழுப்புதலைக் கண்டார் இவான். சுமார் 2 லட்சம் மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். இந்த எழுப்புதலை குறித்து மகிழ்ச்சியடையாத குறைகூறிய கிறிஸ்தவ பாதிரிகளும் இருந்தனர். ஆனால் மக்களோ இவான்ஸ் முகத்தில் ஒரு பிரகாசம் இருப்பதையும் தேவனுடைய மகிழ்ச்சி இருப்பதையும் கண்டார்கள். பரிசுத்த ஆவியானவர் எழுப்புதலை வட ஐரோப்பியாவிற்கும், நார்வே, ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா, கொரியா தேசங்களுக்கும் கொண்டு போனார். இவான் ராபர்ட்ஸ் 1951ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி தன்னுடைய 72வது வயதில் காலமானார். வடக்கு வேல்ஸ் தேசத்தில் உள்ள மோரியா சிற்றாலயத்தில் இவர் அடக்கம் பண்ணப்பட்டார். வேல்ஸ் தேசத்தின் எழுப்புதலுக்கு இவான் பெரிய முன்னோடியாக வாழ்ந்தார் என்பதில் ஐயமில்லை!

(நன்றி: எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும்)

சம்பவ விளக்கம்

பெந்தேகோஸ்தே என்னும் நாள் !

அன்பார்ந்தவர்களே, இயேசு தாம் பூமியில் வாழ்ந்த நாட்களில் சபையைக் கட்டாமல் தாம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின் 10வது நாளாகிய பெந்தகோஸ்தே நாளில் (பஸ்கா பண்டிகைக்கு ஐம்பதாவது நாளில்) தாம் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை எருசலேமில் மேல்மாடியிலிருந்த சீஷர்கள்மேல் ஊற்றி, சபையை ஆரம்பித்தார். அன்று பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு மூவாயிரம் பேர் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். (அப். 2:41). இயேசு கிறிஸ்துவை “தேவகுமாரன்” என்று விசுவாசித்து, அவரை சொந்த இரட்சகராகஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் பாவமன்னிப்பைப் பெற்று, அவருக்குக் கீழ்படிந்து நடக்க அர்ப்பணிக்கும் கூட்டமே சபையாகும். அதே வேளையில் நாம் சபை என்று சொல்லும்போது ஒரு கட்டிடம், ஒரு ஸ்தாபனம், ஒரு கூட்டத்தையும் குறிக்கலாம். இந்த சபை, கடந்த ஞாயிறு தேவசெய்தியில் கேட்டது போல பெந்தெகோஸ்தே நாளில் ஆரம்பிக்கப்பட்டபடியால் இதை பெந்தெகோஸ்தே சபை என்று அழைக்கலாம்,. (கிறிஸ்தமஸ் அன்று பிறந்தவனை கிறிஸ்டோபர் என்றும் ஈஸ்டர் அன்று பிறந்த ஒருவனை ஈஸ்டர் ராஜ் என்று அழைப்பது போல) இந்த சபை சரித்திரப் பூர்வமாக பெந்தெகோஸ்தே நாளில் ஆரம்பிக்கப்பட்டது. அத்தகைய சபையில் இருக்கும் உங்களை தம்முடைய பரிசுத்த ஆவியினால் வழிநடத்தி நித்திய ஜீவனை தருவார்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்!!!

நன்றி: தரிசனக்குரல் (22.05.2016)


230 + ஜீவனுள்ள சாட்சிகள் (Tamil Edition) Kindle Edition

Buy Kindle Edition (₹214)

* Read it for free with Kindle unlimited


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami